உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி பக்தர்கள் ஆடி அமாவாசைக்கு நீராட செயற்கை காவிரி!

திருச்சி பக்தர்கள் ஆடி அமாவாசைக்கு நீராட செயற்கை காவிரி!

திருச்சி: ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு வரும் பக்தர்கள் நீராடுவதுக்காக, போர்வெல் மூலம் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியனோடு சந்திரன் ஒரே ராசியில் இணையும் நாளே அமாவாசை எனப்படுகிறது. ஆடி மாதத்தில் கடக ராசியில் இருக்கும் சூரியனோடு, சந்திரன் கடக ராசியில் பிரவேசிக்கும் ஆடி அமாவாசை நாள் வெகு சிறப்பானதாக கருதப்படுகிறது.அன்றைய தினம் முன்னோருக்கு திதி, திவசம், சிரார்த்தம் செய்வதும், புனித நதிகள், கடல்களில் நீராடுவதும் புண்ணியமாக கருதப்படுகிறது. பிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடி அமாவாசையன்று ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம்.கடந்தாண்டு காவிரியில் நீர் பெருகி ஓடியதால், ஏராளமான பக்தர்கள் திதி கொடுத்து, காவிரியில் புனித நீராடி, திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில் போன்ற ஸ்தலங்களில் ஸ்வாமி வழிபாடு செய்தனர். தற்போது காவிரி ஆற்றின் ஒரு ஓரமாக, ஓடை போல நீர் ஓடுகிறது. கொளுத்தும் வெயிலில், கொதிக்கும் மணலில் சென்று ஆற்றில் குளிக்க பெண்கள், முதியவர்கள், வயோதிகர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் குளிக்க காவிரி ஆற்றுக்குள் நீண்ட குழாயில் துளையிட்டு "ஷவர் போல அமைப்பும், பெண்கள், முதியவர் குளிக்க படித்துறையில் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக நடமாடும் கழிவறைகள், தற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் போலீஸ் ஏ.சி., ஜெயச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,போலீஸார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !