உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா கோலாகலம்!

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா கோலாகலம்!

எழுமலை: மதுரை மாவட்டம் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசையையொட்டி, மலையேறி பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அதிகாலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி கோயில்களில் ஆராதனைகள் நடந்தன. காலை 9.40 மணிக்கு சுந்தர மகாலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மலையில் போதிய தண்ணீர் வசதியில்லாததால், பக்தர்கள் தவித்தனர். முடிக்காணிக்கை செலுத்தியவர்கள், குளிக்க முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் ஊற்று தோண்டி, நீர் இறைத்து கொடுத்து, ரூ.50 வீதம் பக்தர்களிடம் வசூலித்தனர். நடைபாதைகளை கழிவறையாக பயன்படுத்தியதால் கோயில் மற்றும் மலைப்பகுதி மாசுபட்டது. நெரிசலில் தவிப்பு:தாணிப்பாறை, வாழைத்தோப்பு அடிவாரங்களில் இருந்து, கோயில் மலைப் பாதைகளில் பக்தர்கள் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. கோணத் தலைவாசல், அத்தியூத்து பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலால், கடக்க 2 மணி நேரமானது. இதனால், தாணிப்பாறை அடிவார "கேட் மூடப்பட்டு, பக்தர்கள் செல்லவும், கீழே இறங்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.பக்தர்கள் பலர், அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் கிடா வெட்டி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தடை செய்யப்பட்ட பான்பராக், சிகரெட், தீப்பெட்டி, பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். சாப்டூர் அரசு மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை துணை ஆணையர் செந்தில் வேலவன், நிர்வாக அலுவலர் அறிவழகன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !