உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாலீஸ்வரர் கோவிலுக்கு ரூ.45 லட்சத்தில் புதிய தேர்!

திருப்பாலீஸ்வரர் கோவிலுக்கு ரூ.45 லட்சத்தில் புதிய தேர்!

பொன்னேரி:திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவிலில், 45 ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் நின்ற தேருக்கு பதிலாக, 45 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய தேருக்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெள்ளோட்டம் விட பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன.பொன்னேரியிலிருந்து, பழவேற்காடு செல்லும் சாலையில் உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில், லோகாம்பிகை சமேத திருப்பாலீஸ்வரர் கோவில் உள்ளது. சுயம்பு வடிவத்தில், இக்கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.கோவில் எதிரில் உள்ள, "அமிர்தபுஷ்கரணி குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது, தவளைகள் அற்று இருப்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தீராத நோய்கள் ஆகியவற்றிற்கு பரிகார ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது. பங்குனி உத்திரம், பிரதோஷ தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில், இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

புனரமைப்பு பணி: இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், பையூர்கோட்ட வேளாள மரபினர் நேரடி மேற்பார்வையில் இக்கோவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுக்கோவில் ஸ்தூபி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மண்டபம் அமைத்தல், உள்பிரகாரம் சுற்றுப்பாதை அமைத்தல், திருக்குளம் சீரமைத்தல் உள்ளிட்டப் பணிகள் நடந்து முடிந்து உள்ளன.இதற்காக, அறநிலையத்துறை 6.40 லட்சம் நிதியுதவியும், பையூர் கோட்ட வேளாள மரபினர் மற்றும் உபயதாரர்களின் நன்கொடையாக, 12 லட்ச ரூபாய் என, மொத்தம், 18.40 லட்சம் ரூபாய் செலவில் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்துள்ளன.

புதிய தேர்: இக்கோவிலில் பங்குனி உற்சவத்தின்போது, கொடியேற்றத்துடன் துவங்கி, தேர் திருவிழா வரை தொடர்ந்து, 10 நாட்கள் உற்சவ திருவிழா நடந்து வந்தது. கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலின், 32 அடி உயர திருத்தேர், சிதிலமடைந்த நிலையில் நின்றுபோனது. அதன்பின் பங்குனி உற்சவம் நடைபெறாமல் இருந்து வருகிறது.தற்போது, கோவிலில் மற்ற திருப்பணிகள் முடிந்த நிலையில், புதிய தேர் செய்திட முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அறநிலையத் துறையின் அனுமதி மற்றும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்று தேர் திருப்பணிகள் துவங்கி உள்ளன. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி ஸ்தபதி அவர்கள் தலைமையில், 13 பேர், தேர் திருப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். அரசு நிதியுதவியுடன் பையூர் கோட்ட வேளாள மரபினர் மற்றும் உபயதாரர்கள் நன்கொடை என, இதுவரை, 45 லட்சம் ரூபாய் வரை திருத்தேர் பணிகளுக்கு செலவிடப்பட்டு உள்ளது.

தத்ரூப சிற்பங்கள்: தேருக்கான, இரண்டு சக்கரங்கள் திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு, இம்மாத கடைசியில் கொண்டு வரப்படவுள்ளது. திருத்தேரில், தற்போது, 15 அடி உயரத்திற்கு தேவசாசனம், சிம்மாசனம் வரை பணிகள் முடிந்து உள்ளன. தேரில் சிவபெருமானின் புராணம் மற்றும் 108 தாண்டவங்கள், முருகன், விநாயகர், பார்வதி, சரஸ்வதி பிரம்மா உள்ளிட்டவர்களின் தத்ரூப சிற்பங்கள் சிறப்பாக வடிவமைக்கப் பட்டு உள்ளன.

வெள்ளோட்டம்: புதிய தேர் திருப்பணிகள் முடிந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெள்ளோட்டம் விட, கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதால், பணிகள் துரிதப்படுத்தப் பட்டு உள்ளன. அதேசமயம் திட்டமிட்ட தொகையைவிட கூடுதலாக செலவு ஏற்பட்டு உள்ளதால், நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.இருப்பினும், திட்டமிட்டபடி வெள்ளோட்டமும், அதை தொடர்ந்து பங்குனி உற்சவமும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !