உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை கோவிலில் பெண்கள் பங்கேற்ற படி பூஜை

கோட்டை கோவிலில் பெண்கள் பங்கேற்ற படி பூஜை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், பெண்கள் பங்கேற்ற படி பூஜை நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசை நாட்களில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் படி பூஜை நடப்பது உண்டு. சபரிமலையில் 18ம் படி வழிபாடு நடப்பது போல், இங்கு பெண்கள் மட்டும் பங்கேற்கும் படி வழிபாடு நடக்கும். இக்கோவிலில், காமாட்சியம்மன் கோவில் நுழைவு பகுதி 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாயையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பகல் 12.30 மணிக்கு நிøறாணி பூஜை மற்றும் 18 படிகளில் கல்யாண காமாட்சியின் திருகாட்சியும், பகல் 1 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. மாலை 3 மணிக்கு நிரும்பலா யாகமும், மாலை 5.30 மணிக்கு பெண்கள் சீர்பாரம் தாங்கி வர திருச்சுற்று வலம் நிகழ்ச்சியும், கற்பூர ஜோதிரூப காட்சியும் நடந்தது. 18 படி பூஜைகளில் பெண்கள் மட்டும் பங்கேற்று பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் செல்வமுத்து குமாரசுவாமி சிவாச்சாரியார், ராஜ துர்கா வழிபாடு பேரவை உறுப்பினர்கள், நிர்வாக அலுவலர் முருகன், தக்கார் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

* தர்மபுரியை அடுத்த முக்கல்நாயக்கன்பட்டி ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில், ஓம் சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன், கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
இதையொட்டி, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அம்மனுக்கு பால் குடம் எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் ஊர்வலம் அனுமந்தபுரம் முதல் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் வரையில் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பூசாரி சின்னகுட்டி, வேடியப்பன், ஊர் கவுண்டர் வேடியப்பகவுண்டர், நாமதாரி கவுண்டர் மற்றும் கிரா மக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
* காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி, ஸ்ரீ வீரதீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சந்தன காப்பு, வடை மாலை சாத்துதல் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* காரிமங்கலம் அடுத்த ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மலைக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் ஆடி அமாவாசையையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
* காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில் ஆகியவற்றில் ஆடி அமாவாசையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் திருவீதி உலா, ஜாமபூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், கீழ்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளி கவசம் சாத்துதல், வடை மாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !