மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடா கும்பாபிஷேகம்
தேவகோட்டை: தேவகோட்டை மருத்துவமனை ரோட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் 55 வது சக்தி பீட கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் சிறப்பு பூஜைகளுடன் அன்னை ஆதிபராசக்தி விக்ரகம் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேவகோட்டை பிரமுகர்கள் முன்னிலையில் மூன்று கால வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்க மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் கோயிலுக்கு வருகை தந்தார். வேள்விக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பங்காரு அடிகளார் கோபுர கலசத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரையும் பாலையும் ஊற்றியும் கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை செய்து கும்பத்தில் சித்தர் பீட கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள அன்னை ஆதிபராசக்திக்கு ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்தார். துணை தலைவர் ஸ்ரீதேவி, அறங்காவலர் உமாதேவி, ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ரமேஷ், முன்னாள் ஐகோர்ட் நீதிபதி முருகேசன், வக்கீல் அகத்தியன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கவுன்சிலர் நிரோஷா, மாவட்ட தலைவர் கனகசபை, தேவகோட்டை தலைவி பெரியநாயகி பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தொண்டர் ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.