அம்மையப்பரே அனைவருக்கும் தாய் -தந்தை காமாட்சிபுரி ஆதீனம்
பல்லடம்: உலகிலுள்ள அனைவருக்கும் அம்மையப்பரே தாய் தந்தை என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டின்போது, காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்தார். பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வேள்வி வழிபாடுகள் நடந்தன.
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது: மனிதன், 83 வயது கடந்தால் ஆயிரம் அமாவாசைகள், மற்றும் பவுர்ணமிகளை பார்த்த பெரும் பலன் ஏற்படுகிறது. இதனால், மீண்டும் பிறப்பு கிடையாது என்பது இந்து மத நம்பிக்கை. நம்மால், நம் சந்ததிகள் வாழ்கின்றன. தாய், தந்தையரே தெய்வம். ஒவ்வொருவரும் உறவாக இருப்பது குடும்பத்தில். இதற்கு, முன்னோர் ஆசீர்வாதமும், கடவுள் அனுக்கிரகம் இருக்க வேண்டும். அமாவாசை நாளில் முன்னோரின் ஆத்மாக்களை சந்தோஷப்படுங்கள். உலகமே பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறது. கோவில் கோவிலாக சென்றாலும் அமைதி வராது. ஒன்பது கோள்களும் உலகை வழி நடத்துகின்றன. அம்மையப்பரே உலகின் தாய் தந்தையர். குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருந்தாலே அமைதி வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மகா மிருத்தியுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவ பெருமான் அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.