இன்று யுகாதி: தெலுங்கு புத்தாண்டு.. திருப்பதியில் சிறப்பு வழிபாடு
தெலுங்கு புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. திருப்பதியில் கோயில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்குவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும்.
கோயில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். அதன் பின் ஜீயர் சுவாமிகளால் ஊர்வலமாக எடுத்து வரப்படும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலனைக் கூறுவர். ராமாயண சொற்பொழிவும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் ஆண்டு முழுவதும் நல்லதாக அமையும். இந்த நன்னாளில் தெலுங்கு ராமாயணத்தில் உள்ள கதையைப் படித்து மகிழ்வோம்.
மொல்லா என்னும் பெண் புலவர் எழுதியது மொல்லா ராமாயணம். மொல்லா என்பதற்கு முல்லைப்பூ என்பது பொருள். கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேற்றப்பட்ட இதில், வால்மீகி சொல்லாத தகவல் ஒன்று இடம் பெற்றுள்ளது.சீதையுடன் காட்டுக்குச் சென்ற ராமர் ஓடக்காரனான குகனிடம், படகில் ஏற்றிக் கொண்டு கங்கையைக் கடக்க உதவும்படி வேண்டினார். ராமர் மீது மிகுந்த பக்தி கொண்ட குகனுக்கு பயம் ஏற்பட்டது. “சுவாமி... தங்களின் பாதத்துாசு பட்டு கல்லும் பெண்ணாக மாறியது போல, என் படகும் பெண்ணாகி விட்டால் பிழைப்புக்கு நான் என்ன செய்வேன்?” எனக் கேட்டான். ராமரின் பாதத்தில் சிறு துாசு கூட இல்லாமல், கங்கை நீரால் கழுவும்படி வேண்டினான். ராமரும் சிரித்தபடி கால்களைக் கழுவியபின் படகில் ஏறினார். இதைக் கண்ட சீதையும், லட்சுமணரும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சி நம் மனங்களிலும் நிலைத்திருக்கட்டும்.