யானை புனித நீர் ஊற்றி ஸ்ரீ நேத்ர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பெரம்பலுார்: பெரம்பலுாரில் சமயபுரம் யானை புனித நீர் ஊற்றி அருள்மிகு ஸ்ரீ நேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பெரம்பலுார் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ நேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் நுாதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் அரசு- வேம்பு திருக்கல்யாணம் நேற்று 11:20 மணியளவில் நடந்தது. விழாவில், சமயபுரம் யானை பங்கேற்று பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து அருள்மிகு ஸ்ரீ நேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தது. இதைத்தொடர்ந்து, அரசு -வேம்பு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, வாஸ்து வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆணைந்து வழிபாடு, குரு வழிபாடு, சங்கல்ப வழிபாடு, அம்மையப்பன் வழிபாடு சிறப்பு பூஜைகள் நடந்தது விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி அருள் பெற்றனர். விழாவில், பம்பை மங்கல வாத்தியங்கள், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், கருப்பு சுவாமி ஆகிய சாமி வேடம் அணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.