நிலக்கோட்டை நடராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திங்கள்கிழமை கணபதி, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. வேதபாராயணம் பாடப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடராஜப் பெருமானுடன் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது. மாலையில் நடராஜர் ஐம்பொன் சிலை பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக நடராஜர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. நேற்று காலை கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் சதாசிவம் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மேயர் இளமதி, முன்னாள் எம்.பி., உதயகுமார், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, ஆய்வாளர்கள் ஊழியர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் ராம திலகம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.