அட்சய லிங்க சுவாமி கோவில் தெப்போற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்திப்பெற்ற, சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்திப்பெற்ற பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில். சமயக் குரவர்களால் பாடல் பெற்ற இக்கோவிலில் சித்திரை விழா கடந்த 14 ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அட்சயலிங்க சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். முக்கிய நிகழ்வாக நேற்று இரவு, அட்சயலிங்க சுவாமி அம்பாளுடன் கோவிலில் இருந்து திருக்குள தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடந்த தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.