முத்துமாரியம்மன் கோவில் சித்திரை வசந்த திருவிழா
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் வசந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று கூழ் வார்த்தல், அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதே போல் சித்திரை மாதம் வசந்த உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு தாயார் குளக்கரைக்கு புறப்பாடு நடந்தது. இதைதொடர்ந்து பூங்கரகம் எடுத்து அப்பகுதி தெருக்களில் வீதி வலம் நடைபெற்றது. அப்போது பகுதி மக்கள் தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர். மதியம் கோவில் வளாகத்தில் அம்மனை வர்ணித்தல் நிகழ்ச்சி முடிந்ததும் கூழ் வார்த்தல் நடந்தது. கோவில் சார்பில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து பின் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் இரவு அம்மனுக்கு கும்பம் படையல் நடந்தது. பின் முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.