உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி

மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிக்கான உத்தரவு ஒப்பந்ததாரர் திருப்பூர் வேல்முருகனுக்கு வழங்கப்பட்டது. விரைவில் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார்.

இக்கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் 2018 பிப்.,2ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. நான்கு ஆண்டுகளான நிலையில் இன்னும் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யாமல் இருந்ததே காரணம்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள களரம்பள்ளி மலையடிவாரத்தில் கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடியும், மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடியும் அரசு நிதி ஒதுக்கியது. கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மதுரையில் கோயில் இடமான செங்குளத்தில் வைக்கப்பட்டன. சமீபத்தில் திருப்பூர் வேல்முருகன் என்பவருக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது. இதற்கான பணி உத்தரவை கோயில் நிர்வாகம் நேற்றுமுன்தினம் அவருக்கு வழங்கியது. ஓரிரு நாளில் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார். அடுத்தாண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.25 கோடியில் கும்பாபிேஷக திருப்பணி: இக்கோயில் கும்பாபிேஷகம் 2009 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆகமவிதிப்படி கடந்தாண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டும். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் துவங்காததால் கும்பாபிேஷக திருப்பணிகளும் துவங்கப்படவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதைதொடர்ந்து திருப்பணிகளுக்காக ரூ.25 கோடியில் மதிப்பீடு தயார் செய்து கோயில் நிர்வாகம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. திருப்பணிகள் மே 15க்குள் துவங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !