சிவாலயங்களில் 16 வகை திரவியங்கள் மணக்க நடராஜருக்கு மகா அபிஷேகம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிவாலயங்களில், சித்திரை மாத திருவோண தினமான நேற்று, ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாலயங்களில், மூலவர் லிங்க வடிவில் அருள்பாலித்தாலும், சிவகாமியம்மனுடன் ஸ்ரீநடராஜர், திருச்சபைகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். ஆண்டுக்கு, ஆறு நாட்கள் மட்டும், மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரையில் -திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி -திருவாதிரை ஆகிய நட்சத்திரங்கள்; ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதி என, ஆறு அபிஷேகம் மட்டுமே நடக்கிறது.
சுபகிருது ஆண்டு, சித்திரை மாத திருவோண நட்சத்திர நாளான நேற்று, சிவாலயங்களில் மகா அபிஷேகம் சிறப்பாக நடந்தது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கே.செட்டிபாளையம் அண்ணாமலையார் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், நேற்று, ஸ்ரீநடராஜர் மகா அபிஷேகம் நடந்தது.