அறநிலையத் துறை அலுவலகத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டடம்
சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளோடு, நான்கு தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத் துறை தலைமையகம் அமைந்துள்ளது.
அதன் கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இயங்கி வருகின்றன. நான்கு கூடுதல் கமிஷனர்கள், 35 இணைக் கமிஷனர், 30 துணைக் கமிஷனர்கள், 77 உதவிக் கமிஷனர்கள், கண்காணிப்பு, செயற்பொறியாளர்கள், நகை சரிபார்ப்பு அலுவலர் என, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.தலைமையக அலுவலகத்தில் இடப் பற்றாக்குறையை போக்க, 15 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.புதியதாக அமைய உள்ள கூடுதல் கட்டடம், நவீன வசதிகளோடு, 40 ஆயிரம் சதுர அடியில் நான்கு தளங்களுடன் அமைய உள்ளது. பணி நியமன உத்தரவுகோவில்களில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்களை பணி வரன்முறை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக, 425 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரி உள்ளிட்ட 33 பேருக்கு, முதல்வர் ஸ்டாலின் பணி நியமன உத்தரவு வழங்கினார். நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவுமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன், அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.