15ம் நுாற்றாண்டு நடுகல்: வாலாஜாபாதில் கண்டெடுப்பு
வாலாஜாபாத்: விஜய நகர பேரரசு காலத்தைச் சேர்ந்த நடுகல் குறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் கூறியதாவது: வாலாஜாபாத், சேர்க்காடு துலுக்காணத்தம்மன் கோவில் வளாக்தில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர பேரரசரின் காலத்தைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தோரின் குல தெய்வ வழிபாடாக உள்ளது.
இச்சிலையில், வலது கையில் உள்ள கத்தியால், தன் தலையை தானே வெட்டிக்கொள்வது போல உருவம் உள்ளது. இடது கையில், கூர்மையான வாள் தரை நோக்கி உள்ளது.கொண்டை தலையும், கழுத்தில் ஆபரண மணி அணிந்து, பொலிவுடன் சிலை காணப்படுகிறது. அரை ஆடையும், கைகளில் காப்பும், வலது காலில் சிலம்புடன் காணப்படுகிறது. இது, 15ம் நுாற்றாண்டைச்சேர்ந்த நடுகல் என, தொல்லியல் உதவி கல்வெட்டாளர் நாகராஜன் மற்றும் உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இதேபோல் ஒரு நடுகல், மதுரை -சோழவந்தான் அருகே, தென்கரை கிராம மூலநாத சுவாமி கோவிலில் உள்ளது. அங்கு, ஆண்டுக்கு ஒரு முறை, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சென்று வழிபடுவதாக, வரலாற்று ஆசிரியர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நடுகல், சாவாரங்கல் சமூகத்தினரின் காவல் தெய்வம் என கூறப்படுகிறது. துலுக்காணத்தம்மன் கோவில் வளாகத்தில், மற்றொரு வீரரின் நடுகல் உள்ளது. வலது கையில் வில்லேந்தி, வீரர் ஒருவர் போருக்கு செல்வதுபோல உள்ளது. இச்சிற்பம் சேதமடைந்து, உருவம் சரியாக தெரியாத நிலையில் உள்ளது. இச்சிலையை வணங்கினால் பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் நீங்குவதாக, இன்றும் மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.