தில்லை நடராஜரின் நடனம் பற்றி அவதூறு; டி.ஜி.பி.,யிடம் புகார்
சென்னை: சிவபெருமான் மற்றும் தில்லை நடராஜரின் நடனம் குறித்து அவதுாறாக, வீடியோ வெளியிட்டு வரும், யு டியூப் சேனல் நடத்தும் மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சிவகுமார்; அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகியான இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்து உள்ள புகார்:சிவபெருமான் மற்றும் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சுவாமியின், தில்லைகாளி நடராஜர் நடனம் குறித்து, யு டூ புரூட்டஸ் என்ற பெயரில், சமூக வலைதளமான, யு டியூப் சேனல் நடத்தும் மைனர் விஜய் என்பவர், மிகவும் அருவருப்பாக பேசி, வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த சேனலை முடக்க வேண்டும். மைனர் விஜய் மற்றும் அவரது பின்னணியில் இருக்கும் சமூக விரோத கும்பல்கள் குறித்து விசாரித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே கருத்தை வலியுறுத்தி, சென்னை திருவொற்றியூரில் செயல்படும், வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன் மற்றும் ஜெகம் பெண்கள் அமைப்பு நிர்வாகி ஜெகசுந்தரி ஆகியோரும், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.