சென்னிமலையில் மூலவருக்கு பக்தர்கள் தரும் பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்த தடை
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் மூலவர் சிலைக்கு, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை கொண்டு, அபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, சென்னிமலை மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கோவில் மூலவர் சிலைக்கு, தினமும் ஆறு கால பூஜைகளில் மட்டும் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால், கால பூஜையை தவிர, பிற நேரங்களிலும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை கொண்டு அபிஷேகம் நடக்கிறது. இதனால் மூலவர் திருமேனி சிலை பாதிக்கப்படுவதாக, ஒரு தரப்பு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட அமைச்சரான முத்துசாமியிடமும் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, கோவிலுக்கு நேற்று வந்தார். இரு தரப்பினர் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்களிடம் கருத்து கேட்டார். இதில் பழநி மலை கோவிலில் உள்ளது போல், திருக்கோவில் நிர்வாகம் சார்பாக, கால பூஜை நேரத்தில் மட்டும் பால், தயிர், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு, அதில் மட்டும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் கொண்டு வரும் எந்த பொருட்களை கொண்டும் அபிஷேகம் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. மூலவருக்கு அபிஷேகம் இல்லையென்றாலும், உற்சவருக்கு பால் அபிஷேக கட்டணம் நடைமுறையில் இருக்கும். இந்த நடைமுறை அனைத்தும் இன்று முதல் கடைபிடிக்கப்படும் எனவும், கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.