திரவுபதி அம்மன் கோவில்களில் அர்ஜூனன் தபசு
திருத்தணி, திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில் நேற்று அர்ஜூனன் தபசு நடந்தது.திருத்தணி அடுத்த, குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் தீமிதி விழா கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் மறுநாள் திரவுபதியம்மன் திருமணம் நடந்தது.நேற்று நண்பகலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், 100 அடி உயரமுள்ள பனை மரத்தில் அர்ஜூனன் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது.வரும், 8ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது.* ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராமத்தில், நேற்று மாலை அர்ச்சுனன் தபசு நடந்தது. கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனை மரத்தில், அர்ச்சுனன் தபசு நடத்தினார். அதே நேரத்தில், பக்தர்களும் தங்களின் நேர்த்திக்கடனாக, அர்ச்சுனருடன் இணைந்து தபசில் பங்கேற்றனர். தபசு நிறைவில், மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தபடி அர்ச்சுனர். பூக்கள், எலுமிச்சம் பழங்களை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்தார். வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.