உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவிலுக்கு பயனில்லாத நந்தவனம்

அரங்கநாதர் கோவிலுக்கு பயனில்லாத நந்தவனம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம், பராமரிக்காததால், முன் காடாக மாறியுள்ளது.

காரமடை அரங்கநாதர் கோவில், கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாகும். இங்கு வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். தோலம்பாளையம் ரோட்டில் தெப்பக்குளம் அருகில், இக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் ஒன்றரை ஏக்கரில் உள்ளது. இங்கு வளர்க்கப்படும் பூச்செடிகளில் இருந்து, அறுவடை செய்யும் பூக்களை, கோவிலில் உள்ள சுவாமி சிலைகளுக்கு மாலையாக கட்டி போட்டு வந்தனர். அதேபோன்று கோவில் சார்பில் வழங்கப்படும் பசு மாடுகளுக்கு, நந்தவனத்தில் தீவன பயிர் பயிர் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த நந்தவனத்தில் எவ்வித பூச்செடிகளும், தீவனப் பயிர்களை வளர்க்காததால், முள் செடிகளும், கொடிகளும் அதிக அளவில் வளர்ந்து, புதர் போல் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிணற்றில் தண்ணீர் நிறைந்துள்ளது. ஆனால் பூச்செடிகளை பயிர் செய்யாமல் உள்ளது. எனவே கோவில் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நந்தவனத்தில் பூச்செடிகளும், பசு மாடுகளுக்கு தேவையான தீவனப் பயிர்களை பயிர் செய்ய வேண்டும் என கூறினர். காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில்," நந்தவனத்தில் பூந்தோட்டம் அமைப்பது குறித்து, திட்ட மதிப்பீடு செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பூந்தோட்டம் அமைக்கப்படும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !