ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம்: பக்தர்கள் பங்கேற்பு!
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் நேற்று சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சங்கல்பம் செய்து வழிபட்டனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நந்திபுர விண்ணகரம் என்றும் நாதன்கோயில் சேத்திரம் திகழ்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாத பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராணதலம் என்ற சிறப்பும் உடையது.மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது.அதன்படி வளர்பிறை அஷ்டமி தினமான கடந்த 26ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கி, பிற்பகல் இரண்டு மணி வரை சுக்லபட்ச ஹோமம் நடந்தது. இதிலே ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஹோமத்திற்குரிய பொருட்களை வாங்கி கொடுத்தனர். மேலும் சங்கல்பம் செய்து செண்பகவல்லித்தாயாரை வழிபட்டனர்.இந்த ஹோமத்தில் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்தால் திருமணபாக்கியம், குழந்தை பேரின்மை, குடும்ப பிரச்னைகள், கடன் நிவர்த்தி, தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.