உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலில் யாளி வாகன உற்சவம்

பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலில் யாளி வாகன உற்சவம்

சிங்கபெருமாள் கோவில்: பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலில், நாச்சியார் திருக்கோலம் மற்றும் யாளி வாகன உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சிங்கபெருமாள் கோவிலில், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் சமேத அகோபிலவல்லி தாயார் கோவில் உள்ளது.ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா, சிறப்பாக நடைபெறும்.

இந்தாண்டுக்கான பிரம்மோற்சவத்திற்கு மே 28ல் பந்தக்கால் நடப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான ஐந்தாம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் யாளி வாகன உற்சவம், நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. மூலவர் பிரகலாதவரதர், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். 12 மண்டகப் படிகளான சிங்கபெருமாள் கோவிலை சுற்றியுள்ள செங்குன்றம், பாரேரி, திருத்தேரி, வீராபுரம் ஆகிய கிராமங்களில் பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கோவில் நுழைவாயிலில் யாளி வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
கோலாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் நடனம், குதிரை நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், அக்கலைஞர்கள் நிகழ்த்தப்பட்டன.பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டத்தில் தீப்பந்தம் ஏற்றி சிலம்பம் சுற்றியது, பார்ப்போரை உற்சாகம் அடைய செய்தது. வாண வேடிக்கைகளுடன் ஐந்தாம் நாள் உற்சவம் நிறைவு பெற்றது.இந்த நிகழ்ச்சியில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !