உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது

முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பழைமை வாய்ந்த முட்டம் மஹாபலீஸ்வரர் கோயிலில் திருப்பணி தொடங்கியது.

மயிலாடுதுறை தாலுகா முட்டம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பெரியநாயகி சமேத மஹாபலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி, பின்னர் முட்டம் சுயம்பு மஹாபலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து இழந்த ஐஸ்வர்யங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது. 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக் கொட்டகையில் சுவாமி, அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இக்கோயில் திருப்பணி இன்று தொடங்கியது. இதையொட்டி, நேற்று  விக்னேஸ்வர பூஜை, பஞ்சாட்சரம் ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பூர்ணாகுதி நடைபெற்று கடங்கள் புறப்பட்டது. தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருப்பணி தொடங்கியது.
நிகழ்ச்சியை, இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர் ராம.நிரஞ்சன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் முட்டம் சி.செந்தில்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். உபயதாரர்கள் பாலகிருஷ்ணன், வைத்தியநாதன், மாவட்ட பிராமணர் சங்கத் தலைவர் பாபு, பாஜக மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குருசங்கர், இந்து மகா சபா சுதாகர், சத்தியமூர்த்தி, ஊராட்சித் தலைவர் கயல்விழிசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழைமை வாய்ந்த இக்கோயிலில் விரைவில் திருப்பணிகள் முடிவுற்று, குடமுழுக்கு நடைபெறவுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !