உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க பிரதிஷ்டை விழா : தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

ராமலிங்க பிரதிஷ்டை விழா : தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

ராமேஸ்வரம் : ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி நேற்று இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

ஜூன் 7ல் துவங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் 3ம் நாளான நேற்று, ராமாயண வரலாற்றில் ஸ்ரீ ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட சிவபூஜைக்கு லிங்கம் சிலை வேண்டி அனுமனிடம் சீதை கூறியதும், சஞ்சீவி மலைக்கு அனுமன் சென்று வர தாமதம் ஆனதால், ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை சிவலிங்கம் வடிவமைத்து பூஜித்தனர். அப்போது சிவலிங்கத்துடன் வந்த அனுமன் கோபமடைந்து, தான் கொண்டு வந்த லிங்கத்திற்கு பூஜை செய்ய வலியுறுத்தி, சீதை வடிவமைத்த சிலையை தன் வாலால் அகற்ற முயன்றும் முடியாமல், வால் அறுந்தது. பின் அனுமனும் சீதை உருவாக்கிய சிவலிங்கத்தை தரிசித்தார். இதனை நினைவு கூறும் விதமாக நேற்று கோயிலில் புரோகிதர் சந்தோஷ் அனுமன் போல் வேடமிட்டு, அனுமன் சிலையை தூக்கியபடியே கோயில் முதல் பிரகாரத்தை சுற்றி வந்து சுவாமி சன்னதிக்குள் சென்று சிவலிங்கத்தை வலம் வந்து தரிசித்தார். பின் ராமநாதசுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் கோயில் துணை ஆணையர் மாரியப்பன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் கமலநாதன், பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முரளிதரன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றுடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !