வடாரண்யேஸ்வரர் கோவிலில் விமான கலசத்துக்கு பாலாலயம்
திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள 13 விமானங்களுக்கும் பாலாலயம் செய்யப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது. இந்த கோவிலில், 2006ல், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டியது.இந்நிலையில், வரும் ஆண்டில், கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கும்பாபிஷேக விழாவை ஒட்டி நடைபெற வேண்டிய கோவில் திருப்பணி நேற்று முன்தினம் மாலை துவங்கியது.இதில், நேற்று முன்தினம், மாலை 5:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை, முதல் கால பூஜை நடைபெற்றது. நேற்று, காலை 6:00 மணி முதல், காலை 7:30 மணி வரை இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டது. அதன் பின், ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று நிலை ராஜகோபுரம், நடராஜர் சபை உள்ளிட்ட 13 கோபுரங்களின் விமானங்களுக்கு, காலை 9 மணி முதல், 10:30 மணி வரையில் பாலாலயம் செய்யப்பட்டது.இதில், திருத்தணி கோவில் துணை ஆணையர் விஜயா, திருவள்ளூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.