புலிக்குத்தி பட்டான் கல் கண்டெடுப்பு
செக்கானூரணி: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பெருமாள்பட்டியில் புலிக்குத்தி பட்டான் கல் கண்டுபிடிக்கப்பட்டது.
பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த அருண் சந்திரன் அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு சாலை ஓரத்தில் வித்யாசமாக இருந்த கல்லை பார்த்து ஆய்வு செய்தபோது அது புலிக்குத்தி பட்டான் கல் என்பது கண்டறியப்பட்டது.அருண்சந்திரன் கூறியதாவது: ஆரம்ப காலங்களில் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளை பாதுகாப்பதற்காக அவற்றை வேட்டையாடும் புலி போன்ற விலங்குகளுடன் வீரர்கள் போராடி உள்ளனர்.
இதுபோன்ற போராட்டத்தின்போது வீரர்களோ, புலியோ இறப்பது உண்டு. இவற்றை அறிவிக்கும் விதத்தில் கல்லில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வைக்கப்படுவது வழக்கம்.இங்கு உள்ள சிற்பம் 4 அடி உயரமும் இரண்டரை அடி அகலத்துடன் பலகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் உள்ளது. அருகில் வீரனின் மனைவி, காலடியில் வேட்டைநாய் காணப்படுகிறது. பாண்டிய நாட்டில் மட்டுமே புலிக்குத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது. இந்தக் கல் மிகவும் சேதம் அடைந்துள்ளது. வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நமது கடமை, என்றார்.