புடவைக்காரி மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா
சூலூர்: பாப்பம்பட்டி பிரிவு ஸ்ரீ புடவைக்காரி மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவு நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ புடவைக்காரி மகாலட்சுமி, கருப்பராயன், கன்னிமார் கோவில்கள் பழமையானவை. இங்கு திருப்பணிகள் துவங்கப்பட்டு, தெய்வங்களுக்கு தனித்தனியாக சன்னதிகள், கோபுரங்கள் கட்டப்பட்டன. கடந்த, 8 ம்தேதி மாலை, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை, மூன்றாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. ஸ்ரீ மகாலட்சுமி, கருப்பராயன் மற்றும் கன்னிமாருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளாசி வழங்கினார். சூலூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, கோவில் கமிட்டியினர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.