21 அடி உயர காளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம்
அன்னூர்: அன்னூர் அருகே 21 அடி உயர காளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அன்னூர், சிறுமுகை ரோட்டில், கைகாட்டியில், கருப்பராயன் கலாமணி நகரில், கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, மாசாணி அம்மன், கரியகாளியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு புதிதாக 21 அடி உயரத்தில் காளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மகாமண்டபம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதையடுத்து நேற்றுமுன்தினம் கும்பாபிஷேக விழா துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. இரவு பஜனை நடந்தது. இன்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலாமணி சுவாமி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதையடுத்து அச்சம்பாளையம் குழுவின் பஜனை நடந்தது. கருப்பராயரின் தச தரிசனம், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. காலையில் துவங்கி மதியம் வரை 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னியூர், அன்னூர், திருப்பூர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.