எமனேஸ்வரம் அங்காள பரமேஸ்வரி, குருநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் அங்காளபரமேஸ்வரி, குருநாதசுவாமி கோயிலில், புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 6 அன்று காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜையுடன் விழா துவங்கியது. ஜூன் 7 அன்று மாலை 5:00 மணி முதல் வாஸ்து சாந்தி நடந்து, ரக்சா பந்தனம், கும்ப அலங்காரம் தொடர்ந்து, யாகசாலை பிரவேசம் நடந்து, முதல்கால யாக வேள்விகள் நடத்தப்பட்டன.
ஜூன் 8 அன்று காலை இரண்டாம் காலம், இரவு மூன்றாம் கால யாக பூஜைகளும் நிறைவடைந்தன. தொடர்ந்து நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை, மகாலட்சுமி பூஜை தொடர்ந்து, நான்காம் கால யாக பூஜைகளும், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனித கூட்டங்கள் புறப்பாடாகி 9:45 மணிக்கு நூதன ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி, குருநாதசுவாமி மற்றும் அனைத்து பரிவாரங்களுக்கும் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு இன்னிசைக் கச்சேரி நடத்தப்பட்டது. விழாவில் தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், உப தலைவர் கணேசன், இணைச் செயலாளர்கள் வரதராஜன், ராமலிங்கம், சண்முகம், ராஜசுந்தரம், இராமலிங்கம், பரம்பரை பூசாரிகள் சப்பானி, ஹேமநாதன் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.