மணலூரில் பாண்டிய மன்னர்கள் வழிபட்ட சிவாலயம் கண்டுபிடிப்பு
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மணலூரில் பூமிக்குள் புதையுண்டு கிடக்கும் பாண்டிய மன்னர்கள் வழிபட்ட சிவன் கோயிலை வெளிக்கொண்டு வர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மணலூர் கண்மாய் கரை அருகே ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய நந்தி சிலையின் மேற்புற பகுதியை காரைக்குடி அழகப்பா பல்கலை துணை பதிவாளர் (ஓய்வு) காளைராசன் குழுவினர் கண்டறிந்தனர். இங்கு 2 அடி அகலம், 4 அடி உயரம், 6 அடி நீளத்தில் நந்தி சிலை இருப்பதை அறிந்தனர்.
முதல் அகழாய்வுடன் முடக்கம்: இது குறித்து காளைராசன் கூறியதாவது, மதுரையை கண்ணகி எரித்த பின் பாண்டிய மன்னர்கள் நாட்டு மக்களுடன் மேற்கு நோக்கி நகர்ந்து தற்போதைய மதுரை நகரை உருவாக்கியுள்ளனர். அவர்கள் வழிபட்ட சிவன்கோயில் நந்தி என தெரியவந்துள்ளது. இதற்கு ஆதாரமாக நந்தி சிலையை சுற்றிலும் 40 அடி நீள அகலத்தில் கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் உள்ளது. முன்பிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இச்சிவன் கோயிலை மையப்படுத்தி குடியிருப்புகள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி 500 மீட்டர் துாரத்திற்கு முதற்கட்ட அகழாய்வு மேற்கொண்டார். நந்தி சிலை பகுதியில் தான் முதலாம் கட்ட அகழாய்வு நடத்தினர். அம்மன் கோயில், அய்யனார் கோயில் ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ளது. எனவே தொல்லியல் துறையினர் இங்கு தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றார். தமிழக தொல்லியல் துறை ஆறு மற்றும் ஏழாம் கட்ட அகழாய்வில் கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலூர் ஆகியவற்றை சேர்த்து நடத்தியது. 8ம் கட்ட அகழாய்வில மணலூர் குறிப்பிட்டிருந்தாலும் இதுவரை அகழாய்வு நடத்தவில்லை. எனவே தொல்லியல் துறை மணலூர் கண்மாய் பகுதியில் அகழாய்வை மேற்கொள்ள வேண்டும்.