கும்பகோணம் சுவாமி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சென்னை : கும்பகோணத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சுவாமி சிலைகள், அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தில் உள்ள, சிவகுருநாதசுவாமி கோவிலில் இருந்த தொன்மையான பல உற்சவர் சிலைகள் கடத்தப்பட்டதாக, அப்பகுதியை சேர்ந்த நாராயணசாமி புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைவர் தினகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரணையை துவங்கினர். விசாரணையில் கோவிலில் இருந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது தெரிய வந்தது. கோவிலில் இருந்த சிலைகளின் புகைப்படங்களை பெற்று, பிரெஞ்ச் இன்ஸ்டியூட் ஆப் பாண்டிச்சேரியிடம் இருந்து பெற்ற புகைப்படங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என, இணையதளத்தில் ஆய்வு செய்ததில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில், சோமாஸ்கந்தர், தனி அம்மன் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அச்சிலைகளை சட்ட ரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.