உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 200 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று சுவடு! மண்ணோடு மண்ணாக கிடக்கும் பரிதாபம்

200 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று சுவடு! மண்ணோடு மண்ணாக கிடக்கும் பரிதாபம்

அவிநாசி:  அவிநாசியில், 200 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று சுவடு, மண்ணோடு மண்ணாக கிடக்கிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியின் பல கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும், வரலாற்று சின்னங்களும் உள்ளன. இதில், அவிநாசி கோவை பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தின் மூலையில், மண்ணோடு மண்ணாக, 200 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், அக்காலத்தில் நிறுவப்படும் துாண்களின் மேல் வைக்கப்படும், வேலைபாடு நிறைந்த ‘போதிகை எனப்படும் கல்லும் கிடக்கின்றன. அங்கு ஒரு மைல் கல்லும் உள்ளது. சங்க காலத்தில், க என்ற எண் ஒன்று, உ என்பது, எண் இரண்டு, என்ற வகையில் தமிழ் எழுத்துக்கள் மூலமே எண்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அங்குள்ள மைல் கல்லில், கருத்தம்பட்டி, 9 மைல், செங்கப்பள்ளி, 11 மைல், அன்னுார், 12 மைல் என, குறிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது; கடந்த, 200 ஆண்டுக்கு முன், வியாபாரம் செய்ய பல இடங்களுக்கு செல்லும் வணிகர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே மடங்களும், அவர்கள் செல்லுமிடம் அறிந்துக் கொள்ள மைல் கற்களும் வைக்கப்பட்டிருந்தன. அவிநாசியில், வரலாற்று சுவடு உள்ள இடமும், அந்த வகையிலானது தான்.  அந்த மைல் கல்லில் குறிப்பிட்டுள்ளபடி, கருமத்தம்பட்டி வழியாக கோவை, பாலக்காடு, அன்னூர் வழியாக, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூரு, செங்கப்பள்ளி வழியாக ஈரோடு, சென்னை என பெருவழிகளை குறிக்கும் வகையில் தான், கல்வெட்டில் மைல் குறிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் காலத்து மைல் கல்லில் கூட தமிழ் எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது, கூடுதல் சிறப்பு. மடத்தில் வைக்கப்பட்ட துாணின் மேல் உள்ள போதிகையும், பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற வரலாற்று சுவடுகள் குறித்து, இளைய தலைமுறையினருக்கு விளக்க வேண்டும். இத்தகைய எண்ணற்ற வரலாற்று சின்னங்களை பாதுகாக்க திருப்பூரில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !