உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் புறம்போக்கு நிலங்களை மாற்றிய உத்தரவு ரத்து சரி: ஐகோர்ட்

கோவில் புறம்போக்கு நிலங்களை மாற்றிய உத்தரவு ரத்து சரி: ஐகோர்ட்

சென்னை:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் புறம்போக்கு நிலங்களை, மீன்வளம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்தது சரிதான் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோவிலுக்கு சொந்த மான, 2.03 ஏக்கர் நிலம், அறநிலையத் துறை ஒப்புதல் இன்றி, 1963ல் மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தின் சிறு பகுதியில், ஐஸ் உற்பத்தி நிலையம், மீன்களை பாதுகாக்கும் கட்டடம் கட்டப்பட்டன. அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, 1.15 ஏக்கர் நிலம், 2018ல் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, கோவில் நிர்வாகங்கள் மற்றும் பக்தர்கள் குகன், ஸ்ரீதர், ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்களை, கோவில் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது எனக்கூறி, அரசின் உத்தரவுகளை ரத்து செய்து, 2020ல்நவம்பரில் தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. பின் பிறப்பித்த உத்தரவு:கோவில் வசம் தான் நிலங்கள் இருந்துள்ளன. இந்த நிலத்தை மீன்வளத்துறை, போக்குவரத்து துறைகளுக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பித்து இருக்கக் கூடாது. கோவில் புறம்போக்கு நிலங்களை, சட்டம் மற்றும் விதிகள்படி, மேம்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வழக்கை பொறுத்தவரை, அறநிலையத்துறை கமிஷனரிடம் ஆலோசிக்கவில்லை. கோவில் சொத்தை, அரசிடம் ஆலோசித்து, நீண்ட கால குத்தகைக்கு விட, அறநிலையத்துறை கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை; எனவே அந்த உத்தரவில் குறுக்கிட வேண்டியதில்லை. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உடனே அமல்படுத்த வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி, கமிஷனர் தன் அதிகாரத்தை செயல்படுத்தி கொள்ளலாம். மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !