தொண்டபுரி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
செந்துறை : - நத்தம் அருகே தொண்டபுரி ராஜ விநாயகர், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி ஜூன் 29ல் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
அழகர் கோயில், காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்கள் மேளதாளம் முழங்க கடம் அழைத்து வருதல் நடந்தது. ராஜ விநாயகர், மாரியம்மன், பரிவார தெய்வங்களை திருகுடத்திற்குள் எழுந்தருள செய்தல், இரண்டு கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை தெய்வங்களுக்கு உயிர் ஊட்டுதல், மூலிகை வேள்வி உள்ளிட்ட பூஜைகளும் நடந்தது.
இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துடன் கடம் புறப்பட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், குடகிபட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.