உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்க்கையில் தேறாது!

தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்க்கையில் தேறாது!

எவரிடமும் இனிமையாகப் பேசுவது தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முதல்படி. கடந்த காலம் திரும்புவதில்லை, நிகழ்காலம் விரும்புவதில்லை. காலம் விரைந்து கொண்டிருக்கிறது. காலத்தின் அருமையை உணர்ந்து கடமையை விரைவில் செயல்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்.  அரிய செயல்களைச் செய்ய வேண்டுமானால் மனம் ஒருமுகப்பட வேண்டும். மனஇறுக்கம், மனதை ஒருமுகப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை.

ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன் அதனால் ஏற்படும் நல்லனவற்றையும், அல்லனவற்றையும் ஆராய்ந்து தீர்மானித்து உரிய காலம் அறிந்து செயல்பட வேண்டும். பிறரை அனுசரித்து வாழ்பவர்கள், விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள், சரியாகவும் ஆழமாகவும் சிந்திப்பவர்கள், உழைப்பும் முயற்சியும் உள்ளவர்கள் மட்டுமே வெற்றிகளைக் குவிக்கிறார்கள்.

எந்த அளவுக்கு உயர்வான சிந்தனைகள் நம்மிடம் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கே நாம் சாதனைகளைப் படைக்க முடியும். தூங்குவதும் ஏங்குவதும் வாழ்க்கையில் எதையும் தேறவிடாது. உள்ளத்தின் ஊக்கத்திற்கு ஏற்பவே ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகள் அமைகின்றன. அந்த முயற்சிகளுக்கேற்பவே அவன் பெறும் வெற்றிகளும் அமைகின்றன.

நாம் உயர்ந்தவராக விரும்பினால் உயர்ந்தவற்றையே நாம் சிந்திக்க வேண்டும். உயர்ந்தவற்றையே பேச வேண்டும், உயர்ந்தவற்றையே செயல்படுத்த வேண்டும். வியாபாரம் செய்வதற்கு பணம் தேவை. குழந்தைக்கு தாயன்பு தேவை. மனிதன் உயர்ந்த நிலையில் வாழ்வதற்கு பெரியோர் தொடர்பு கட்டாயம் தேவை. சின்னஞ்சிறு சிந்தனைகளில் மனம் உழன்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, உயர்ந்த சிந்தனைகளில் மனதை வைத்திருப்பதற்கு, முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டும்.

அற்ப விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் பெரிய சாதனைகளைப் படைக்க இயலாதவர்களாக இருப்பார்கள். கண்ணாடியில் தூசு படிந்திருந்தால் அதில் உருவம் சரியாகத் தெரியாது. அதுபோல் எதிர்மறையான சொல், செயல், சிந்தனைகள், தீய எண்ணங்கள், தீய இயல்புகள் ஒருவரிடம் இருந்தால் அவரது ஆற்றல் வெளிப்படாது. தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். சுடச் சுடத்தான் பொன் ஒளிரும். அரைக்க அரைக்கத்தான் சந்தனம் மணக்கும். உழைக்க உழைக்க மனிதன் உயர்வு பெறுகிறான்.

தோல்வி என்பது ஒரு பாடம். பல அறிவியல் கண்டுபிடிப்புகள், பல பரிசோதனைகளின் தோல்விகளிலிருந்து கிடைத்த வெற்றிகள் தான், துன்பப்படாமல், உழைக்காமல் சிரமப்படாமல் உலகில் அரிய சாதனைகளைப் படைக்கவே முடியாது. உறுதியான வைரம் பாய்ந்த நெஞ்சம் உடையவர்கள் மகத்தான வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள். அலைபாயும் மனம் உள்ளவர்கள் தோல்வியைத் தழுவுபவர்களாக இருப்பார்கள்.

குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசுவதும், குடத்திலிட்ட விளக்காக ஒளி மங்கிப் போவதும் அவரவர் கையில் தான். ஊக்கம் இல்லாதவனிடம் முயற்சி இருப்பதில்லை. முயற்சி இல்லாதவனிடம் ஆக்கமும் இல்லை, செழிப்பும் இல்லை. நான்உயர்ந்தவன்என்ற எண்ணத்துடன், முழு ஊக்கத்துடன் செயல்புரிய வேண்டும். அப்படிசெய்தால் தோல்வியின் நிழல் கூடநம் மீது படியாது. -விளக்குகிறார் கமலாத்மானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !