உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.


இக்கோவில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.இக்கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தது. 10ம் தேதி மூலநாதர், வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று காலை 7.40 மணிக்கு நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை துணை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மாட வீதிகள் வழியாக தேரில் வலம் வந்து மூலநாதர், வேதாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை 11.30 மணியளவில், முதல்வர் ரங்கசாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தியாகராஜன் உடனிருந்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், துணை தலைவர் சக்திவேல், செயலாளர் காத்தவராயன், பொருளாளர் பிரபு மற்றும் கிராம மக்கள் செய்தனர்.இன்று முருகன், வள்ளி, தெய்வானை தெப்பல் உற்சவம், நாளை 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !