உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்: நான்கு லட்ச ஜபங்களுடன் நிறைவு

பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்: நான்கு லட்ச ஜபங்களுடன் நிறைவு

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக உயிர்களின் நன்மைக்காக கற்பக விநாயகரை வேண்டிநான்கு லட்ச ஜபங்களுடன், 1008 கலசாபிஷேகம் நடந்தது. ஹோமமண்டபத்தில் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாகசாலை பூஜைகளை தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சார்யார், சோமசுந்தர குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட பல வேத பாடசாலைகளைச் சேர்ந்த சிவாச்சார்யார்கள் செய்தனர்.நேற்று காலை 8:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்கு லட்ச ஜப ஹோமம் நிறைவடைந்து. காலை 11:30 மணிக்கு பிரதான கலசங்களுக்கு வஸ்திரம் சாத்தி, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகசாலை பூஜைகளை தரிசித்தனர். தருமபுரி ஆதினம், துளாவூர் ஆதினம், பாதரக்குடி ஆதினம் பங்கேற்றனர். தொடர்ந்து சிவாச்சார்யார்கள் கலசங்களுடன் கோயிலுக்கு புறப்பட்டனர்.மூலவர் கற்பக விநாயகருக்கு மதியம் 12:40 மணிக்கு கலசாபிஷேகம் துவங்கியது.தொடர்ந்து யாக சாலையிலிருந்து சிவாச்சார்யார்கள் கலசங்களை கொண்டுவர அபிஷேகம் தொடர்ந்தது. ஒரே நேரத்தில் கோயிலில் எழுந்தருளியுள்ள கடவுளர்களுக்கும் அபிஷேகம் நடந்தது.உற்ஸவர் மண்டபத்தில் உற்ஸவ விநாயகர், அங்குசத்தேவர், சண்டீகேஸ்வரர் ஆகியோருக்கும் அபிஷேகம் நடந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.மூலவருக்கு அபிஷேகம் முடிந்து சுயம்பு திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம் சிவாச்சார்யர்களால் தெளிக்கப்பட்டது. யாகசாலை பூஜைகளில் பங்கேற்ற வேத பாடசாலை மாணவர்கள், திருமுறை பாராயணம் செய்தவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !