உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் ஆடி, ஆவணி ஞாயிறு

அம்மன் கோவில்களில் ஆடி, ஆவணி ஞாயிறு

ஆர்.கே.பேட்டை: ஆடி மற்றும் ஆவணி மாதம் என, ஒட்டு மொத்தமாக, 10 ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் நடத்தப்படும் சிறப்பு பூஜை இரண்டாம் வாரமாக நேற்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.ஆடி மற்றும் தை மாதம் என ஆறு மாத கால இடைவெளியில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.மேலும், ஆடி, ஆவணி மாதங்களில் வரும்  ஞாயிற்றுக்கிழமைகளில், பிரசித்தி பெற்று அம்மன் கோவில்களுக்கு, குடும்பத்தினருடன் வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொள்வதும் பக்தர்களின்  வழக்கமாக உள்ளது.இந்த வகையில், பெரியபாளையம், படவேடு உள்ளிட்ட அம்மன் கோவில்களுக்கு, தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பிரத்யேகமாக ஏற்பாடு செய்து கொள்ளும்  வாகனங்களில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட உள்ள ஆடு, கோழிகளுடன் சென்று சிறப்பு பூஜையில் ஈடுபடுகின்றனர்.ஆடி மாதம் முதல் தேதியே ஞாயிற்றுக்கிழமையில் அமைந்தது. ஆடி கிருத்திகைக்கு  அடுத்த நாளான நேற்று, இரண்டாம் ஞாயிறு கொண்டாட்டத்தை ஒட்டி, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், அம்மன் கோவில்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர். இரவு கோவிலில்  தங்கி இருந்து விட்டு, இன்று, திங்கட்கிழமை காலை வீடு திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !