ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சிவசிவ கோஷத்துடன் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. 6ம் நாள் விழாவான இன்று ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்ர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டிய புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 21 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.