ஆடி அமாவாசை வழிபாடு: முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த பொதுமக்கள்
பேரூர்: பேரூர், நொய்யல் ஆறு படித்துறையில், ஆடி அமாவாசையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று, மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை தினமான நேற்று, முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே, பேரூர் படித்துறையில் குவிந்தனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதோடு, நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்தின்றி காணப்பட்டது. இந்நிலையில், நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களும் என, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் வந்து, எள், அரிசி, பழங்களுடன் பிண்டம் வைத்து, நொய்யல் ஆற்றில் கரைத்து, தங்களின் முன்னோர்களை வழிபாடு செய்தனர். பட்டி விநாயகர் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும், ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.