குடந்தையில் சுவாமி விவேகானந்தர் 7 அடி உயர வெண்கல சிலை ஆக.15ல் திறப்பு
தஞ்சாவூர்,: கும்பகோணத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி சுவாமி விவேகானந்தரின் ஏழு அடி உயர வெண்கல சிலை திறப்பு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், விழாவிற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1897 ம் ஆண்டு பிப்ரவரியில் இளைஞர்கள்,மாணவர்கள் மத்தியில் சுவாமி விவேகானந்தர், "எழுந்திருங்கள்; விழித்தெழுங்கள்; லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லுங்கள்", என்ற மக்களைத் தட்டி எழுப்பும் முழங்கினார்.
இந்நிலையில், 125 ஆண்டுகளுக்குப் முன்பு சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றிய இடத்தில், அவரது 7 அடி உயர வெண்கல சிலை அமைப்பதற்கான பணியை, கும்பகோணம் போர்ட்டர் நகர மையம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம், இணைந்து செய்து வருகின்றனர். இச்சிலையானது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தின் அன்று திறக்கப்படுகிறது. இவ்விழாவுக்கான ஆலோசனைக் கூட்டம், கும்பகோணம் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் போட்டர் டவுன் ஹாலில் நடந்தது. இதில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் விளக்க உரையாற்றினார்.
அப்போது சுவாமி விமூர்த்தானந்தா பேசியதாவது; நாட்டின் சுதந்திர விழா நாளில் சுவாமிஜியின் சிலை திறப்பும் அமைவது சாலச் சிறந்ததாகும். விழாவையொட்டி 13ம் தேதி விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் விவேக விஜய ஜோதியும், 14ம் தேதி விவேகானந்தர் யாத்திரையும், தருமபுர ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானத்தின் ஆசியுரையும் நடக்கிறது. சிலை திறப்பு விழா நாளில், மகாமக குளம் கரையிலிருந்து போர்ட்டர் டவுன் ஹால் வரை மாணவ, மாணவியர், பக்தர்கள் பங்கேற்கும் விவேகானந்தர் விஜய ஊர்வலம், போர்ட்டர் டவுன் ஹாலில் மூத்த துறவியர்களான புதுச்சேரி ஆத்மகனானந்தர், சேலம் யதாத்மானந்தர், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, நாராயணி நிதி லிமிடெட் நிறுவனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்கின்றனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், கோவிந்தபுரம் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் திவ்ய நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், விழாவுக்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இதில், குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், விவசாய சங்கத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன், ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.