உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நடக்கும் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்ட நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மங்களப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ரங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்கு எதிர் சீராக ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இதைப்போல் மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்கும், ஆண்டாள் கோயில் சார்பில் மங்கள பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து, திருச்சி மண்டல அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர். ராமசுப்பு, சுந்தர் பட்டர் தலைமையில் மங்களப் பொருட்கள் ஆண்டாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். யானை முன் செல்ல மாட வீதிகள் சுற்றி, கோயிலுக்கு மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். இதேபோல் மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்தும் நேற்று மாலை 6:00 மணியளவில் பரிவட்டங்கள் கொண்டுவரப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

இன்று அதிகாலை 05:00 மணிக்குமேல் ஆண்டாள், ரெங்கமன்னார் திருத்தேருக்கு எழுந்தருகின்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சரியாக காலை 9:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள் செய்துள்ளனர். இதனை முன்னிட்டு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !