உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு

300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக, சென்னை பாரிமுனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனை, பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் பினிரோ; சிலை கடத்தலில் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது வீட்டில், பழமையான கோவில்  சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த வீட்டில், இமானுவேல் பினிரோவின் மனைவி பமீலா, 65, என்பவர்  வசித்து வருகிறார்.ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, அம்மன், சனீஸ்வரர் உட்பட ஒன்பது கற்சிலைகளை போலீசார் கண்டுபிடித்தனர். சிலைகளுக்குரிய ஆவணங்கள் எதுவும்  பமீலாவிடம் இல்லை.இது குறித்து போலீசார் கூறியதாவது:இந்த சிலைகள், 300 ஆண்டுகள் பழமையானது. சிலைகளின் அடிப்பகுதியில், கோவிலில் நிறுவப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் உள்ளன;  இதனால் இவை திருட்டு சிலைகள் தான். எந்த கோவில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டன என விசாரித்து வருகிறோம். பமீலா, இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தார்.  இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து, விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சிலைகளை மீட்ட போலீசாரை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !