உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் எட்டு சிலைகள் பறிமுதல்

சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் எட்டு சிலைகள் பறிமுதல்

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் ஸ்தபதி ஒருவரின் வீட்டில் இருந்து, 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை உட்பட எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று, ஸ்தபதி மாசிலாமணி வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள், மாசிலாமணி வீட்டின்  முன் திரண்டு, சிலைகள் இங்கு செய்யப்பட்டவை; அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது எனக்கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்தபதி மாசிலாமணி மகன் கவுரி  சங்கர் கூறியதாவது:இங்கிருந்து எடுக்கப்பட்ட சிலைகள் நாங்கள் உருவாக்கியது. நாங்கள் செய்த சிலையை, போலீசார் பழங்கால சிலை எனக்கூறி, எடுத்துச் சென்று விட்டனர். எவ்வளவோ கூறியும்,  அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழில் செய்கிறோம். இந்த சிலையை, எங்களை மீறி வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !