விநாயகர் சதுர்த்தி : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.,31) காலை தீர்த்தவாரி நடைபெற்றது.
இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஆறாம் திருநாளில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு விநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 4:30 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பில் அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மூலவருக்கு இந்த அலங்காரம் நடைபெறும்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்ஸவிநாயகர் திருகுளத்தின் தெற்கு கரையில் எழுந்தருளினார். தெற்கு படித்துறையில் அங்குசத்தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து காலை 10:00 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு 18 படி பச்சரிசியிலான முக்கூருணி மோதகம் மூலவருக்கும் படைக்கப்படுகிறது. இரவு 8:30 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்கள் திருவீதி வலம் வருவார்கள்.