தஞ்சாவூர் பெரியகோவிலில் மராட்டிய விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மராட்டிய கால விநாயகருக்கு 10 கிலோவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோவில், மராட்டியர் ஆட்சிக்காலத்தில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. அப்போது முதல் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் விமரிசையாக செய்யப்பட்டது. அதன் பின்னர் கால போக்கில் நின்று போனது. இதையடுத்து, சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு முதல் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 5 அடி உயரமுள்ள இந்த விநாயகருக்கு 10 கிலோ சந்தனம் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல, பெருவுடையார் சன்னதி அருகேயுள்ள இரட்டை விநாயகருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.