சதுரகிரியில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு
ADDED :1126 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 06:40 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் ஒரு மணி வரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் செய்திருந்தனர்.