உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் மூலவர் பாதுகாப்பு வல்லுநர் குழு ஆலோசனை கூட்டம்

பழநி கோயில் மூலவர் பாதுகாப்பு வல்லுநர் குழு ஆலோசனை கூட்டம்

பழநி: பழநி மலைக்கோயில் மூலவரை பாதுகாக்கும் வல்லுனர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கோயில் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பழநி, மலைக்கோயில் தண்டாயுதபாணி சுவாமி மூலவர் போகர் சித்தரால் நவபாஷாணத்தால் கட்டமைக்கப்பட்டது. தற்போது பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது மூலவரை பாதுகாத்திடவும், பலப்படுத்திட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க சமய பெரியோர்கள், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, சிற்ப சாஸ்திரம் கற்றறிந்த ஸ்தபதி, ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று (அக்., 14) பழநி மலைக்கோயில் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. காலை 10:00 மணி அளவில் துவங்கியது. வல்லுனர் குழு உறுப்பினர்கள், அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு இடையே பழநி மலைக்கோயில் மூலவர் திருமேனியை வல்லுநர் குழுவினர் தரிசனம் செய்தனர். அதன் பின் மாலை 3:00 மணி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் கூறுகையில், "ஆகம விதிகளை பற்றி விளக்க மூன்று ஆதீனங்கள் இக்குழுவில் உள்ளனர். சிலை பாதுகாப்பு குறித்து கூற தலைமை ஸ்தபதி சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற கருத்து தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துக்களும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அரசின் முடிவுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தின் போது மூலவருக்கு மருந்து சாத்துதல் நடைபெறும். இதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. அரசின் முடிவுப்படி குழுவில் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இது நாள் வரை கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மூலவருக்கு மருந்து சாத்துதல் முறைப்படி நடந்தது. அதே போல் தற்போதும் நடக்கும். இதனால் மூலவருக்கு எந்த சேதாரமும் ஏற்படப்போவதில்லை. இக்குழு ஆகம விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது. தற்போது வல்லுநர் குழுவிடம் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கள் மட்டும் கேட்கப்பட்டுள்ளன. " என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !