ஈஷா யோகா மையத்தில் மத்திய அமைச்சர் தரிசனம்
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், லிங்க பைரவியை தரிசனம் செய்தார். மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். இந்நிலையில் நேற்று, ஈஷா யோகா மையத்திற்கு சென்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தியானலிங்கத்தில் தியானம் செய்துவிட்டு, லிங்க பைரவியை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆதியோகி பார்வையிட்டார். ஈஷா அறக்கட்டளை சார்பில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர், இயக்குனர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மத்திய அமைச்சரை சந்தித்தனர். அப்போது, உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதேபோல, விவசாயிகளுக்கு தொடர்ந்து பல உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.