அமாவாசை அன்று சூரிய கிரஹணம் எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்?
அமாவாசை அன்று சூரிய கிரஹணம் நிகழ உள்ளதால், அன்று இரண்டிற்கும் தனித்தனி தர்ப்பணம் செய்யாமல் ஒரே தர்ப்பணமாக செய்யலாம் என, சாஸ்திர பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிற்கு, 96 தர்ப்பணங்கள் உண்டு என்றும், அந்த நாட்களில், பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது. தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, மகாளய பட்சத்தின், 15 நாட்கள், கிரகண காலங்கள், திதி முதலான நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்; முன்னோர்களை வணங்கவேண்டும்.
காகங்களுக்கு உணவிட வேண்டும்; இயலாதவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என, ஞானநுால்களும் அறிவுறுத்துகின்றன. வரும் அமாவாசை அன்று, சூரிய கிரஹணம் நிகழ்கிறது. இதனால், இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று கேள்வி பரவலாக எழுந்துள்ளது. வேத விற்பன்னர்கள் சிலர், இரண்டு வேளையும் தர்ப்பணம் செய்யலாம் என பொதுவாக கருத்து தெரிவித்தாலும், அன்று ஒரே தர்ப்பணம் மட்டும் போதுமானது என, சாஸ்திர பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது: தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை வருகிறது. அன்றே சூரிய கிரஹணம் நிகழ்கிறது. இரண்டிற்கும் தர்ப்பணம் செய்வது நம் பழக்கத்தில் உள்ளது. அதனால், இரண்டிற்கு தனித்தனியே தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல தர்மசாஸ்திர நுாலில் இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தால், சூரிய கிரஹணம் பிடிக்கும் போது மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் என கூறுகிறது. அவ்வாறு செய்யும்போது, அமாவாசை தர்ப்பணம் செய்த பலன் அதில் அடக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, 25ம் தேதி மாலை 5:15 மணிக்கு சூரிய கிரஹணம் துவங்கிய பின், ஸ்நானம் செய்து, தர்ப்பணம் செய்தால் போதும். ஆனால், சிறார், முதியவர், நோய்வாய் பட்டவர் தவிர மற்றவர்கள் அன்று முழுதும் உணவு அருந்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -