திருச்செந்துார் கந்த சஷ்டி விழா : பக்தர்கள் தங்க வசதி
திருச்செந்துார் : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்துார் கோவிலில் பக்தர்கள் 10 நாட்கள் தங்கியிருந்து, விரதம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலில் தங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. உடனே, பா.ஜ., உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, திருச்செந்துார் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கூறியதாவது: வழக்கமாக, திருச்செந்துார் கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவர். தற்போது, பழைய கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு வருகின்றன. அதில் கிடைக்கும் பொருட்கள் கோவில் பிரகாரத்தில் தான் வைக்கப்படுகின்றன. எனவே, சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்க, 13 தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை தங்கலாம். பக்தர்களின் வசதிக்காக தற்காலிகமாக 150 குளியல் அறை மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே 170 கழிப்பறைகள் இருக்கின்றன. எனவே வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர்